Friday, December 25, 2009

பாரம்பரியம்

       நெல்
இலக்கியங்களில் ‘செந்நெல்’ எனும் சொல்லையே மிகுதியாகக் காண்கிறோம். ஒருவேளை இது தரத்தில் சிறந்ததாக இருக்கலாம். சிலம்பு ‘ஐவனம்’ என்னும் நெல்லைப் பற்றிக் கூறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இவ்வகை நெல் மலைச்சாரலில் விளைந்ததாம். பாரி ஆண்ட பிரதேசத்தில் மூங்கில் நெல் விளைந்ததாகக் கபிலர் பாடுகிறார்.மங்கல விழாக்களில் நெல் தூவி வாழ்த்துவது தமிழர் மரபு; தற்போது அட்சதை தூவுகிறோம்.

நெல் விளையும் நிலப்பரப்பை வயல் என்றும், பிற பயிர்கள் விளையுமிடத்தைக் கொல்லை என்றும் குறிப்பது மரபு - (எ கா) சோளக் கொல்லை, இஞ்சிக் கொல்லை, மஞ்சள் கொல்லை, பருத்திக் கொல்லை.

காலணி அணிந்து கொண்டு வயலில் இறங்க மாட்டார்கள்; நாற்று நடும்போதும், கதிர் அறுக்கும் போதும் பெண்கள் குலவை இடுவர். நெற்பயிர் பால்கட்டி நிற்கும்போது வயலிலிருந்து ஒருவித நறுமணம் வீசும். நெல்லால் சரம் சரமாக மாலை கட்டுவதும், நெற்கதிர்களை நேர்த்தியாகப் பின்னி வீட்டு முகப்புகளில் தொங்க விடுவதும் தமிழ் மரபு. நெல்லை அரை வேக்காடாக அவிப்பதற்குப் புழுக்குதல் என்று பெயர்; நெல் வேகும்போது நறுமணம் பரவும்.பாரதத்தில் நான்கு லக்ஷம் நெல்வகைகள் இருந்ததாக Dr.R.H. Richaria கூறியுள்ளார். ஒரு நாளைக்கு ஒரு ரகம் உண்ணக் கிடைத்தாலும் மனித ஆயுளில் சுவைத்து மாளாது.

கார் நெல் , மணக்கத்தை , வாலான் , கருங்குறவை , ஈர்க்குச் சம்பா , புழுகுச் சம்பா , கைவரைச் சம்பா , செஞ்சம்பா , கல்லுண்டைச் சம்பா , குண்டுச் சம்பா , மல்லிகைச் சம்பா , இலுப்பைப் பூச்சம்பா , மணிச்

சம்பா , வளைதடிச் சம்பா , கோரைச் சம்பா , குறுஞ் சம்பா , மிளகுச் சம்பா , சீரகச் சம்பா ,கிச்சிலிச் சம்பா, காளான் சம்பா , மைச் சம்பா , கோடைச் சம்பா , காடைச் சம்பா , குன்றிமணிச் சம்பா, கலிங்கச்சம்பா, குறுஞ்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி போன்றவை நெல்லின் பல ரகங்கள்.

பாஸ்மதி போன்ற உயர் ரகத்தைச் சேர்ந்தது தமிழகத்தின் சீரகச் சம்பா; கலிங்கச் சம்பா ஒரிசா மாநிலத்திலிருந்து தமிழகம் வந்ததாக ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் ‘யானைக் கொம்பன்’ ரகம் மிகவும் புகழ் பெற்றது, அது சன்ன ரகம். ’குலை வாழை’ ரகம் பலகாரங்களுக்கு ஏற்றது.குலை வாழை பற்றி அமரர் கல்கி எழுதியுள்ளார். சம்பா அரிசியை இல்லங்களில் நிவேதனம் செய்ய உபயோகிப்பர்; அது செந்நிறத்தில் சுவையாக இருக்கும். சம்பா அரிசி மாவால் செய்யப்படும் புட்டு சுவையாக இருக்கும் என்பர். நெல்லை மணலோடு சட்டியில் வறுத்து நெல் பொரி தயார் செய்வர்.

சம்பா அரிசிச் சோறு நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து. பாரம்பரிய நெல்வகைகள் உணவாக மட்டுமின்றி, நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டன. அகத்தியர் குணபாடத்தில் அரிசியால் ஏற்படும் நன்மைகளைக் காண்கிறோம்; ஆனால் கைக்குத்தல் அரிசிதான் ஆரோக்யம் தர வல்லது. தவிடு கால்நடைகளுக்கு உணவாகும்; தவிட்டிலிருந்து எண்ணெயும் தயாரிக்கலாம். உமி வரட்டியோடு சேர்ந்து எரி பொருளாகும்; அல்லது வயலுக்கு எருவாகும்.

தமிழகத்தில் பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து, தற்போது அருகி வரும் மடு முழுங்கி, மாப்பிள்ளைச் சம்பா, 60ம் குறுவை போன்ற சில ரகங்கள் பற்றி -

மடு முழுங்கி: இந்த நெல் ரகத்தை ஆறு, குளம், ஏரிகளில் வறட்சிக் காலங்களில் தூவி விடுவர். மழை பெய்தபின் நீர் நிலைகளில் இது முளைத்து விடும். தண்ணீர் எவ்வளவு இருந்தாலும் அந்த மட்டத்திற்குக் கதிர் வளர்ந்து மேலே நிற்கும். பரிசலில் சென்று கதிர் அறுப்பார்கள். இதன் வயது 180 நாள்கள்.

மாப்பிள்ளைச் சம்பா: இது நல்ல ஊட்டச்சத்து மிக்க நெல் ரகமாகும். இதைச் சாப்பிட்டால் புது மணமகனுக்குள்ள வலிமை உண்டாகும். இந்த அரிசி சாப்பிட்டவர்கள் கிராமங்களில் இளவட்டக் கல்லைத் தூக்கவும், காளை மாடுகளை அடக்கவும் செய்வர். இதன் அறுவடைக்காலம் 180 நாள்.

60ம் குறுவை: இது 60 நாளில் அறுவடைக்கு வந்து விடும். இந்த நெல்லைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சில இடங்களில் பயிரிடுகின்றனர்.

இதே போல் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த கருங்குறுவை, சீரகச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, காட்டுயானம்,ஒற்றியடையான், நவ்ரா ஆகிய நெல் வகைகள் அழிந்து விட்டன. இவை நார்ச் சத்துக் கொண்டதாகச் செந்நிறத்தில் காணப்படும். இவ்வகை அரிசிகள் ஜீரண சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவன. மேலும் இந்த மரபுசார் வகைகள் இயற்கை உரங்களைத்தான் ஏற்றுக் கொள்ளும்; ரசாயன உரங்களை ஏற்றுக் கொள்ளாது. இவற்றின் காலம் 60 நாள் முதல் 180 நாள்கள்; இவை தற்போது அழிந்து வருகின்றன.

கொல்லி மலைச் சாரலில் மூங்கில் நெல்விளைகிறது. ‘Wild Rice’ என்னும் ரகம் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆழ்நீர் நெல் சாகுபடி என்று ஒரு முறை உள்ளது; பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், மியன்மர் போன்ற நாடுகளில் அதிகம். இந்தியாவின் கடலோரம் உள்ள சில தாழ்வான நிலப்பகுதிகளிலும் செய்யப்படுகிறது. கேரளாவில் ஆலப்புழை,எர்ணாகுளம், திருச்சூர் பகுதிகளில் அப்படி செய்யப்படும் சாகுபடிக்கு ’பொக்காலி நெல்’ என்று பெயர். வங்காளத்திலும் இம்முறை உள்ளது.

ஜீவாமிர்தக்கரைசல் மூலம் நீர்த்தேவையைக் குறைக்கும் வேளாண் நுட்பங்களையும் தமிழகத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்; தற்போது Zero Budget இயற்கை வேளாண்மை சூடு பிடித்து வருகிறது.

வங்க தேசக் கண்டுபிடிப்பான Swarna-Sub1 நெல் ரகம் வெகுகாலம் நீரில் மூழ்கினாலும் அழுகாத தன்மை கொண்டது. VRI 1 என்னும் ரகம் 70-75 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடுகிறது. புரதச் சத்து மிக்க அரிசி வகைகளைக் கண்டறிவதில் அறிவியலார் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும்; இவ்வகை ரகங்கள் விளைந்தால் பின்தங்கிய நாடுகளில் காணப்படும் சத்துக் குறைபாடு நீங்க வழி பிறக்கும்.

நெல்லை விளைவிப்பதில் காலம் காலமாக விவசாயிகள் எதிர் கொள்ளும் இடையூறுகள் ! எழுதி மாளாது. பல புதிய ரகங்கள் பசுமைப் புரட்சிக்குப்பின் விளைச்சலைத் தந்துள்ளன என்றாலும் எண்ணற்ற அரிய நெல்வகைகள் காணாமல் போனது ஒரு பேரிழப்பே.

ஆன்மிகத்தில் நெல் –

நெல்லை மழையிலிருந்து காத்தார் நெல்வேலி நாதர்;

சுந்தரருக்காகக் குண்டையூர்க் கிழாரின் வாயிலாக நெல்

அனுப்பினாரம் இறைவன்.

ஒரு நெல்மணி மழிசைப் பிரானின் பேரறிவை உலகறியச் செய்தது. கீழே கிடந்த கருநிற நெல்லை நகத்தால் கிழித்து மறை ஓதியவர்கள் விட்ட இடத்தைக் குறிப்பால் உணர்த்தினார் திரு மழிசைப்பிரான்.

நெல்லின் பெயரில் ‘பஹுவ்ரீஹி ஸமாஸம்’ (வ்ரீஹி - நெல்) என்னும் ஒரு தொகைகூட வடமொழி இலக்கணத்தில் உள்ளது; இது தமிழில் அன்மொழித் தொகை.

திருநெல்வேலி, நெல்லூர், நெற்கட்டும் செவ்வல், வயலூர் என்று நெல்லின் பெயரில் பல ஊர்களும் உள்ளன.

ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கம் பெரியகோயிலில் ஒவ்வொரு ஸந்நிதிக்கும் தனித்தனியான அரிசி வகைகளை, அமுது செய்விப்பதற்கு ஏற்றனவாக வரையறை செய்ததாக வரலாறு. அவ்வாறு கண்டருளப் பண்ணுவதற்கான (நிவேதனத்துக்குரிய) நெல்வகைகளைப் பிள்ளைலோகம் ஜீயர், ”ஸ்ரீ ராமாநுஜார்ய திவ்ய சரிதை” என்னும் நூலில் -"அநந்தரம் இப்பால் சுற்றுக் கோயில்களுக்கு அமுதுபடி (அரிசி), பருப்பமுது, கறியமுது, நெய்யமுது, ஸம்பா வகைகளும், விடி வோறே விட்டபடிகளு மாராய்ந்து, திருக்கொட்டாரத்தருகே எழுந்தருளி அமுதுபடி பருப்பமுதுகள் அளக்கும் படியையும், அவலமுது இடிக்கும் படியையும், அவை பொரியமுதாகப் பொரிக்கும் படியையும் பராமர்சித்து, இப்பால் களஞ்சியங்களினருகே திருவரங்கனுக்குத் தகுதியாகத் திருவரங்கன் என்கிற நெல்லும், ஸ்ரீரங்கராஜர் போகத் தளிகைக்குத் தகுதியான ராஜாந்த நெல்லும், நம்பெருமாளுக்குத் தகுதியான சம்பா நெல்லும், என் திருமகள் சேர் மார்பனுக்குத் தகுதியான சீரார் செந்நெல்லும், சேஷசாயிக்குத் தகுதியான வரம்புற்ற கதிர்ச் செந்நெல்லான செஞ்சாலி நெல்லும், மற்றும் பகவத் போக்யமான பஹு வ்ரீஹி வர்க ஸமூஹங்கள் (பலவகைப் பட்டநெல் வகைகளும்) அதுக்குமேலே கோதூம, மாஷ, முத்கலாதிகளான (கோதுமை, உளுந்து, பயறு) இவை எல்லாம் அளந்து களஞ்சியங்களிலே சொரியும்படி நியமித்து, அப்படியே செய்கிற அவற்றின் ஆரவாரமும் கண்டு கேட்பதாய்க் கொண்டு........... என்று கூறியுள்ளார்.

ஓர் ஆலயத்தின் ஒழுகுதானே என்று இதை ஒதுக்கிவிட முடியாது; அரியதோர் ஆவணமாகவே கொள்ளலாம். காவிரிப் படுகையில் பலவகை நெல் ரகங்கள் விளைந்தன என்பதும், கோதுமை பத்தாம் நூற்றாண்டில் தமிழரின் உணவு முறையில் இடம் பெற்றது என்பதும் இதனால் நமக்குத் தெரிய வருகிறது.தேவ்

No comments:

Post a Comment